from moonlander:
சில இதழ்கள் பார்த்து விட்டுத் தூக்கிப் போட வேண்டியவை; இன்னும் சில இதழ்கள் படித்து விட்டு தூரப் போட வேண்டியவை; ஆனால் படித்து பத்திரப்படுத்த வேண்டிய இதழ்கள் என்ற ரகத்தில் ஏதேனும் உண்டா என்று அக்கறையோடு அலசிப் பார்த்தால் சில நினைவுக்கு வரும்; சில நிகழ்காலத்திலும் நிமிர்ந்து நிற்கும். நிலாச்சாரல் நிகழ்காலப் பத்திரம்; பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய ஒன்று! இணைய தளத்தில் வளைய வரும் இதை கணிணியில் கட்டிப் போட்டு விடலாம், சுலபமாக!
அத்வானிஜியையும் மன்மோகன் சிங்ஜியையும் வம்புக்கிழுக்கும் டி.எஸ்.பத்மனாபன் வம்புச் சுவை ஒரு பக்கம்; கலெக்டர் அன்னியன் வெல்வானா என்று ஆரம்பித்து கலக்கல் செய்திகளின் அடியே குறளை இணைத்து அதன் வழியே சிந்தனையைத் தூண்டி விடும் பாங்கு இன்னொரு பக்கம்! இசையை விட்டு சிறுவனைப் பிடிக்க அந்தச் செய்தி சனியாக மைக்கேல் ஜாக்ஸனைப் பிடித்து ஆட்ட, சட்டம் குற்றமில்லை
என்று சொல்ல மீண்டு வந்த அவரைப் படம் பிடித்துக் காட்டும் கட்டுரையைத் தருகிறார் எஸ்.வி.என். பேசாமல் இசையோடு
ஐக்கியமாக வேண்டியது தானே என்ற எஸ்.வி.என்னின் பார்வை அனைவருக்கும் பிடிக்கும்!
அடுத்து சட்ட பாயிண்டுகளை (இலவசமாகத் தான்!) அள்ளி வீசும் லாயர் பெண்மணி கார்த்திகாவின் ஆலோசனைப் பக்கம்
தூள் கிளப்புகிறது.
நன்னன் என்ற கொடுங்கோலன் சிறுமிக்கு தண்டனை கொடுத்த செய்தியில் ஆரம்பித்து பத்து அற்புதமான தமிழ்ச் செய்திகளை ஆராய்ச்சிக் கட்டுரையாக வழங்கியுள்ளார் ச.சுவாமிநாதன். ஆச்சர்யமூட்டும் செய்திகள் அனைத்துமே!
சட்டமும் தண்டனையும் தூக்கலாக இருக்கிறதே என்று ஆதங்கப்படாமல் இருக்க உடனடி ·பாஸ்ட் புட் ரேஞ்சு நகைச்சுவையாகத் தன் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை பேராசிரியர் டாக்டர் விஜய் ராகவன் அள்ளித் தெளிக்க ஒரு மணி நேரம் முன்னால் போனதால் ஏற்பட்ட காலேஜ் கலாட்டா நம்மைக் கவர்கிறது!
சத்தி சக்திதாசன் 'இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு' என்று முழங்கிய காவியக் கவிஞரின் தாலாட்டுப் பாடல்களைப் படம் பிடிக்கிறார். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று; குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று என்று மறக்க முடியாத தங்க வரிகளை இனம் காட்டுகிறார்.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை ராகத்தோடு சுட்டிக் காட்டுகிறார் பிரேமா சுரேந்திரநாத் தனது எம்.கே.டி வரலாறில்! சிவகவியின் வதனமே சந்திரபிம்பமோ மறக்க முடியாத பாடல்! - பல விதத்திலும்!! முகமது சந்திர பிம்பமோ என்று முதலில் இருந்த அந்தப் பாடலை 'முகமது' பாடலுக்குள் வருவதை ஆட்சேபித்த நண்பர்களிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தனர் படக் கலைஞர்கள். முகம் + அது = முகமது என்று பார்க்க வேண்டும் என்ற வாதமெல்லாம் தவிடு பொடியாக பாட்டையே வதனமே சந்திர பிம்பமோ என்று மாற்றிய வரலாறு மறக்க முடியாததல்லவா!
தரமான பொழுதுபோக்குக்கு நன்றி, நிலாச்சாரல்
No comments:
Post a Comment